மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி
|மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 4-வது சுழற்சியில் நாக் கமிட்டியின் ஏ-பிளஸ் பிளஸ் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதன்மூலம் தொலைநிலைக்கல்வி இயக்ககம் வாயிலாக இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் நடத்தப்படும் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதாவது, தொலைநிலைக்கல்வி (ஓ.டி.எல்.) மற்றும் ஆன்லைன் கல்வி (ஓ.எல்.) ஆகியவற்றில் இந்த படிப்புகளில் மாணவர்கள் சேர அனுமதி அளித்துள்ளது. எனவே தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்தின் https://mkuniversityadmission.samarth.edu.in/என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழக வளாகம் மற்றும் அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் உள்ள நேரடி சேர்க்கை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்று தொலைநிலைக்கல்வி இயக்குனர் (பொறுப்பு) முத்துப்பாண்டி தெரிவித்துள்ளார்.