மதுரை
இதுவரை எத்தனை குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது?
|வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவான கொலை வழக்குகளில் இதுவரை எத்தனை குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது? என்று தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தனபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி எஸ்.சி., எஸ்.டி., சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டாலோ பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியிருந்தது உள்ளிட்ட குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டால் அவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை, விவசாய நிலம் அல்லது பென்சன், வீடு, போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, 3 மாதங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். ஆனால் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு மேற்கண்ட நிவாரணங்கள் முறையாக அளிக்கப்படுவதில்லை. எனவே இதுவரை பதிவான வழக்குகளில் உரிய நிவாரணங்களை வழங்கியது குறித்து தெரிவிக்க உத்தரவிட வேண்டும். முறையாக சலுகைகளை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவான கொலை வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை போன்ற நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.