சிவகங்கை
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
|அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
காரைக்குடி
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்கள்
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உ.சிறுவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர் அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் செட்டியார் (பெண்கள்) உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அருணாச்சலம் செட்டியார் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட மு.சி.த.மு.சிதம்பரம் செட்டியார் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், பஸ் பயண அட்டை, இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அரசு வழங்கி வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு வருகின்ற மாணவர்கள் பயன்பெறுவதற்காக விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. தற்போது 5 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 474 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.
அறிவு திறனை வளர்க்க வேண்டும்
போட்டிகள் நிறைந்த இந்த நவீன காலத்தில் மாணவர்கள் தங்களது அறிவுத்திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சிறந்த முறையில் பயில வேண்டும். அதன் மூலம், தங்களது பெற்றோருக்கும், தங்களது ஆசிரியர்களுக்கும் தாங்கள் பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊக்கத்தொகை
நிகழ்ச்சியில், மேற்கண்ட பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவி களுக்கு ஊக்கத்தொகையாக முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ஆனந்த், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரண்யாசெந்தில்நாதன், பேரூராட்சி தலைவர்கள் கார்த்திக்சோலை (கோட்டையூர்), .சாந்தி (பள்ளத்தூர்), ராதிகா (கானாடுகாத்தான்) சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன், கவுன்சிலர் செட்டிநாடு பாலு, உ.சிறுவயல் ஊராட்சி மன்றத்தலைவர் குழந்தை மற்றும் பள்ளிக்கல்வி துறையை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.