தேனி
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வாட்ஸ்-அப் குழு; கலெக்டர் உத்தரவு
|ஓய்வூதியம் பெறும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வாட்-அப் குழு உருவாக்கப்பட்டு குறைகள் குறித்து தீர்வு காணப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டா் தெரிவித்தார்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, "இந்த ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கிறது. எனவே மற்ற நாட்களில் தங்களின் கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் சுதந்திர போராட்ட வீரர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாட்ஸ்-அப் குழு ஒன்றை துறை அலுவலர்கள் உருவாக்கி, அதன் மூலம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.