தேனி
விவசாயிகளுக்குவேளாண் எந்திரங்கள் வழங்கும் விழா
|தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில், அரசு மானியத்துடன் வேளாண் எந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது.
தமிழகத்தில் 5 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில், அரசு மானியத்துடன் வேளாண் எந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, 10 விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், 23 விவசாயிகளுக்கு பவர் வீடர்கள் ஆகிய எந்திரங்களை வழங்கினார். இந்த எந்திரங்களுக்கு மொத்தம் ரூ.18 லட்சத்து 8 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. விழாவில், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, இந்த விழா நடந்த இடத்தில் சுவர் போன்று திரை அமைக்கப்பட்டு அதில் பேனர் கட்டும் பணி நடந்தது. ஆனால், கட்டிய பேனரை அகற்றுவதும், திரை துணி நிறம் சரியில்லை என்று மாற்றுவதும், மீண்டும் பேனர் வைப்பதுமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் பேனரோடு தொழிலாளர்களும், அலுவலர்களும் மல்லுக்கட்டினர். இதனால், விழாவில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ.க்கள் பேனர் கட்டும் பணிகள் முடியும் வரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.