தேனி
குடிநீர், பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
|குடிநீர், பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், அணையின் நீர்மட்டம் தற்போது 62 அடியாக குறைந்தது. இதற்கிடையே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வைகை அணையில் இருந்து கிருதுமால்நதி வழியாக தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறையினருக்கு அரசு உத்தரவிட்டது.
எச்சரிக்கை
அதன்படி 690 மில்லியன் கன அடி தண்ணீரை 10 நாட்களுக்குள் வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.மொத்தமாக 4 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே மழையின்றி நீர்வரத்து குறைந்த நிலையில், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.