புதுக்கோட்டை
வங்கிகளில் செலுத்தப்படும் வைப்பு தொகைக்கானவட்டியை இரட்டிப்பாக்க வேண்டும்
|மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெயரில் வங்கிகளில் செலுத்தப்படும் வைப்பு தொகைக்கான வட்டியை இரட்டிப்பாக்கிட வேண்டும் என்று மாநிலங்களவையில் அப்துல்லா எம்.பி. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெயரில் வங்கிகளில் செலுத்தப்படும் வைப்புத் தொகைகளுக்கான வட்டியை இரட்டிப்பாக்கி வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் இதர சராசரியான குழந்தைகளின் பெற்றோர்களை விடவும் பல்வேறு மருத்துவ செலவு, பராமரிப்பு செலவு, கல்வி, சமூக, பொருளாதார பாதுகாப்பு என கூடுதல் பொறுப்புக்கும், சுமைக்கும் ஆளாகின்றனர். மாற்றுத்திறனாளியான குழந்தைகளை வளர்ப்பது, அதிலும் இதுபோல் சிறப்பு தேவைகளை கொண்ட மனநலம் குன்றிய குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகுந்த சிரமத்தையும், பொறுப்பையும் கொண்டது.
8 சதவீதம் பெறுகின்றனர்
எனவே அவர்கள் கடினமாக உழைத்து, மனநலம் குன்றிய தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்க முயற்சி செய்கிறார்கள். அந்த வகையில் தங்கள் குழந்தையின் பெயரில் வங்கிகளில் செலுத்தும் வைப்புத்தொகைக்கான வட்டி பின்னாளில் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்க வேண்டும் என்ற அக்கறையிலும், கவலையிலும்தான் பணத்தை வங்கிகளில் வைப்பு நிதியாக செலுத்துகின்றனர். தற்போது அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பொது சேமிப்புத் திட்டங்களின் கீழ் சமீபத்திய நிலையான வைப்பு வட்டி விகிதங்களின்படி, பொதுமக்கள் அதிகபட்சமாக 7.2 சதவீத வட்டி விகிதத்தை பெறுகிறார்கள். மூத்த குடிமக்கள் தங்கள் வைப்புத்தொகையில் அதிகபட்சமாக 8 சதவீதம் வரை பெறலாம் என்ற நிலை உள்ளது.
இரட்டிப்பாக்க வேண்டும்
ஆனால் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான வைப்புத்தொகைக்கு சராசரியான வட்டியே வழங்கப்படுகிறது. தற்போது அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளோ, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு திட்டங்களை நிர்வகிக்கும் சட்டங்களோ கூட இந்த நாட்டில் தெளிவாக இல்லை.
எனவே குறைந்தபட்சம் அவர்களது எதிர்கால சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமையாகும். எனவே, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வைப்புத்தொகைக்கான வட்டியை இரட்டிப்பாக்கி வழங்கிடும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.