தேனி
குழந்தைகள், பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை
|குழந்தைகள், பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்ைக விடுத்தார்
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து குழந்தைகள், பெண்களுக்கான விடுதிகளும், தமிழ்நாடு சிறார் மற்றும் பெண்களுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ன்கீழ் வருகிற 31-ந்தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் பதிவு செய்து உரிமம் பெற மாவட்ட சமூக நல அலுவலகத்திலும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் செயல்படும் விடுதிகள் உரிமம் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலும், மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெண்களுக்கான தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் பதிவு செய்ய தொடர்பு கொள்ளலாம்.
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் விடுதிகள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்படும். பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்களுக்கு சட்டப்பிரிவு 20-ன்கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து குற்றம் செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் நீட்டிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.