ஈரோடு
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிஈரோட்டில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
|நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து, தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி எதிரே ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரத போராட்டத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட மன வேதனைகளை குறித்தும், நீட் தேர்வினை ரத்து செய்வதன் அவசியம் குறித்தும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் பேசினர். மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்த தி.மு.க. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வால் தமிழக மாணவ- மாணவிகள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநில உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், பிரதமரிடம் பேசி உள்ள நிலையிலும் தமிழ்நாடு கவர்னர் தவறான கருத்துக்களை கூறி வருகிறார். இதில், மாநில அரசுடன் கவர்னர் ஒத்துப்போக வேண்டும். ஆனால் அவர் மாறான கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருப்பது வருத்தத்துக்குரியது.
சட்ட ரீதியான நடவடிக்கை
இந்த உண்ணாவிரதம் அரசியல் நோக்கத்துக்கானது அல்ல. மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கானதாகும். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை ஒப்படைப்பார்கள் என நம்புகிறோம். இதன் அடுத்தக்கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.