< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காகவீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணிமாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
கடலூர்
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காகவீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணிமாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு

தினத்தந்தி
|
21 July 2023 12:15 AM IST

கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நடக்கிறது. இதனை கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், சொரக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டோக்கன் வினியோகம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 1416 ரேஷன் கடைகளில் 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் நடக்கிறது. முதல் விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட பதிவு அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரையிலும் நடக்கிறது. முதல் கட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டு, வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை அளித்தனர். விண்ணப்பங்களை அளிக்கும் போது, அவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டனர். டோக்கனில் எந்த நாள், எந்த நேரம் விண்ணப்பத்தை பதிவு செய்ய வர வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர் ஆய்வு

கடலூரில் திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், சொரக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு சரியான முறையில், விடுபடாமல் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். சில வீடுகளில் அவரே நேரிடையாக டோக்கன், விண்ணப்பம் வழங்கினார்.

மேலும் ரேஷன் கடை பணியாளர்கள் சரியான முறையில் டோக்கன் வழங்குகிறார்களா? என்று மாவட்ட, மண்டல, வட்ட அலுவலர்களும் ஆய்வு செய்தனர். மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம், புதுக்குப்பம், புதுப்பாளையம், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

குடும்ப தலைவி

இந்த திட்டத்திற்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதாவது தகுதி பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவி கலைஞர் உரிமை திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக இருந்தால், அந்த குடும்ப தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார். மனைவி இல்லாத பட்சத்தில் இதர பெண்களில் ஒருவர் குடும்ப தலைவியாக கருதி, அவர் விண்ணப்பிக்க தகுதி உடையவர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்