< Back
மாநில செய்திகள்
அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல்

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சட்ட மன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

கட்சி பிரதிநிதி கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், சிறப்பு சுருக்கமுறை திருத்தம், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் 421 இடங்களில் 820 வாக்குச்சாவடிகள் உள்ளது. தேர்தலை நடத்திட ஏதுவாக 4596 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டு 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த ஜனவரி 2023-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் வரப்பெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, வரைவு பட்டியல் தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல்

அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 09-ந் தேதி வரை விடுபட்டுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெறவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நவம்பர் 4-ந் தேதி, 5-ந் தேதி, 18-ந் தேதி மற்றும் 19-ந் தேதி ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பான பணிகளை செம்மைப்படுத்திட, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்திட அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரப்பட்டுள்ளது.

100 சதவீதம் பெயர் சேர்த்திட....

எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தகுதியுள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் பெயர் சேர்த்திட இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேசன், உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா, தனி தாசில்தார் (தேர்தல்) விஜயராகவன் மற்றும் அனைத்து தாசில்தார்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்