மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வியல் முறையை பின்பற்ற வேண்டும் -வெங்கையா நாயுடு
|மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வியல் முறையை பின்பற்ற வேண்டும் என முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை,
மறைந்த பிரபல எழுத்தாளர் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா மற்றும் கி.ரா. நூறு கட்டுரை தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் எம்.சக்ரவர்த்தி முன்னிலை வகித்தார். வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
வெங்கையா நாயுடு
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழாவில் கலந்து கொண்டு 'கி.ரா. நூறு' என்ற கட்டுரை தொகுப்பு நூல்களை வெளியிட்டார். முதல் பிரதியை ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் நிறுவனர் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பெற்றுக்கொண்டார்.
விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
கி.ரா., தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்பட்டார். அவரை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம்.
அவரது மிகச்சிறந்த படைப்பான 'கோபல்ல கிராமம்' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவரது படைப்புகள் எளிய நடையில், பேச்சு தமிழில் இருப்பது மிகவும் சிறப்பு.
அமைதி குலைந்து விட்டது
நமது பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மதிப்பு குறைந்துகொண்டே செல்கிறது. அந்த காலத்து திரைப்படங்கள் நமது கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக இருந்தது.
இப்போதைய திரைப்படங்களில் வன்முறையும், ஆபாசமுமே அதிகமாக காணப்படுகிறது. வன்முறை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. அமைதி குலைந்துவிட்டது.
இதனால் இளம் தலைமுறையினருக்கு பதற்றமும், அதனால் கவனச்சிதறல்களும் ஏற்படுகின்றன. நினைத்ததை சாதிக்க முடியாமலும் போகிறது.
மகிழ்ச்சி கிடைக்கும்
எனவே, நெறிமுறைகளை பின்பற்றி நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும்.
மேற்கத்திய கலாசாரத்தை கைவிட்டு, நமது தாத்தா, பாட்டி வாழ்ந்த அனுபவப்பூர்வமான வாழ்க்கையை பின்பற்ற வேண்டும். நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே தற்போதைய தேவையாக இருக்கிறது. அதன் மூலமே அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி கிடைக்கும்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வியல் முறையை பின்பற்ற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். முன்னோர்களை போல குழந்தைகளுக்கு அறநெறி கதைகளை கூற வேண்டும். நமது கலாசாரம், பண்பாட்டின் பெருமைகளை எடுத்துக்கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், சுயமுன்னேற்ற பயிற்சியாளர் எழுத்தாளர் முத்தையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். கி.ரா.வின் பேரன் திலீபனுக்கு வெங்கையா நாயுடு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
முடிவில் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் குமார் ராஜேந்திரன் நன்றி கூறினார்.