< Back
மாநில செய்திகள்
பதிவுசெய்து காத்திருக்கும் 4,047 விவசாயிகளுக்குஉடனே மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பதிவுசெய்து காத்திருக்கும் 4,047 விவசாயிகளுக்குஉடனே மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:44 AM IST

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மின்வாரியத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 4,047 விவசாயிகளுக்கும் உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் துறைமங்கலம் நான்குரோடு அருகே உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி, மின்நுகர்வோர்கள், விவசாயிகளின் கோரிக்கைகள், குறைகளை கேட்டறிந்தார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் செயற்பொறியாளர் அலுவலகம் முன், இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், தளவாட பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் அம்பிகாவிடம் மனுகொடுத்துவிட்டு, அலுவலகம் முன்பு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகள் கொடுத்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களாக இருமுனை மற்றும் மும்முனை மின்சாரம் அடிக்கடி தடையுடன் பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தநிலை தொடராமல் தடுத்திடவும், இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் அடிக்கடி தடையுடன் மின்வினியோகம் செய்யப்பட்டு வருவதையும், கண்காணித்து தடையில்லா மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக அரசு அறிவித்தபடி பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் விவசாயம் செய்ய தோதுவாக தடையில்லாத மும்முனை மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுத்திட தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு 2023-2024-ம் ஆண்டுக்கு சாதாரண முன்னுரிமை மற்றும் சிறப்பு முன்னுரிமையில் ஒதுக்கிய இலக்கீடு 427 விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு கிடைத்திட தேவையான தளவாட சாமான்களை பெற்றுத்தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து மின் இணைப்பு கிடைக்காமல் காத்திருக்கும் 325 விவசாயிகளுக்கு மின்னிணைப்பு கிடைத்திட இலக்கீடு அதிகப்படுத்தி கொடுத்திட வேண்டும்.

தங்களுக்கு மின்னிணைப்பு வேண்டி கோட்ட மின்பொறியாளர் அலுவலகத்தில் 1-4-2013-ந்தேதிக்கு பின்னர் பதிவு செய்து காத்திருக்கும் 4,047 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு கிடைத்திட 90 நாள் நோட்டீஸ் கொடுத்திட தமிழக அரசும், மின்வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், செயற்பொறியாளர்கள் சேகர், அசோக்குமார், பெரம்பலூர் மின்கோட்ட உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் மின்பொறியாளர்கள், மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டனர். இதில் மின்நுகர்வோர்களிடம் இருந்து 7 மனுக்கள் பெறப்பட்டு கோரிக்கை-குறைகளை நிவர்த்தி செய்திட உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்