மதுரை
ஓட்டலில் சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு
|மதுரையில் ஓட்டலில் சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மதுரையில் ஓட்டலில் சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
3 பேருக்கு உடல்நலக்குறைவு
மதுரை காமராஜர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சிவா சில நாட்களுக்கு முன்பு, தனது குடும்பத்துடன் தந்தூரி வகை கோழி இறைச்சி வாங்கி சாப்பிட்டுள்ளார். அன்று இரவே சிவா மற்றும் அவருடைய 2 குழந்தைகளுக்கும் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு அனைவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கேப்டன் சிவா, பிரபல ஓட்டலில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். இதன் எதிரொலியாக, அந்த அசைவ ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கெட்டுப்போன உணவுகள் பறிமுதல்
ஆய்வின்போது ஓட்டலின் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கெட்டுப் போன இறைச்சி மற்றும் சிக்கன் ரைஸ் போட பயன்படும் 4 கிலோ பழைய சாதம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஓட்டலில் கண்டறியப்பட்ட குறைகள் தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. காலக்கெடுவுக்குள் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.