< Back
மாநில செய்திகள்
கால்பந்து வீராங்கனை மரணம்: மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை மரணம்: மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
18 Nov 2022 4:32 PM IST

கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துள்ளது.

சென்னை,

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதி மகள் பிரியா (17), சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.

இதற்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்தவமனையில் கடந்த 7-ம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், கால் வலி, வீக்கம் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வலது கால் அகற்றப்பட்டது.

பெரியார் நகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்ததால், விசாரணை நடத்த சுகாதாரத் துறை குழு அமைத்தது. இதற்கிடையில், பிரியா கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மாணவிக்கு தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி 2 மருத்துவர்களும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், "இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை இதற்குமுன் வெற்றிகரமாக செய்துள்ளோம். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலரும் இன்று நல்ல நிலையில் உள்ளனர். மாணவி பிரியா உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். சாட்சிகளை கலைக்க மாட்டோம். மேலும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம்" என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்கள் தரப்பில், நூற்றுக்கணக்கான மிரட்டல்கள் வருகிறது. சரணடைய செல்வதற்கே ஆபத்தாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களின் வாதத்தினை கேட்ட நீதிபதி, எந்த நிவாரணமும் வழங்க முடியாது, வேண்டுமானால் சரணடையுங்கள். உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும் என்று தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு, மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்