சிவகங்கை
20 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
|சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மல்லாகோட்டை ஊராட்சி தலைவர் விஜயா ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஏற்பாட்டில் சேவுகப் பெருமாள் அய்யனார், சூரக்குடி கோவில்பட்டியில் அமைந்துள்ள செகுட்டுஅய்யனார் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பின்புறம் உள்ள கலையரங்கத்தின் முன்பு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு 20 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார். சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பரம்பரை கோவில் சிவாச்சாரியார் செந்தில்குமார், பூஜகர் ரமேஷ், கோவில் வேளார் வம்சாவழி பூஜகர்கள், பிரகாஷ் ஆகியோர் இணைந்து பந்தலில் மலை போல் குவிக்கப்பட்ட அன்னத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் தலைவாழை இலை போட்டு 6 வகை காய்கறிகளுடன் உணவுகள் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில், கிராம அம்பலம் சத்தியசீலன், புசலியம்மாள் மருத்துவமனை பொது மருத்துவர் அருள்மணி நாகராஜன், இளம்பரிதி கண்ணன், பாரிவள்ளல் பள்ளி மேலாளர் சரவணன், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் கண்ணையா, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் மல்லாக்கோட்டை முத்துகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, பாலசுந்தரம், மற்றும் பலர் பங்கேற்றனர்.