திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் அன்னதான திட்டம்; போதிய பணியாளர்கள் இல்லாததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு
|திருத்தணி முருகன் கோவிலில் அன்னதான திட்டத்திற்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த முருகன் கோவில் நிர்வாகம் 30 பேரை ஒப்பந்த ஊதியத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்தது. இதில் 8 பேர் பணி நியமனம் பெற்ற ஒரு வாரத்திற்குள்ளாகவே நின்று விட்டனர். 4 ஊழியர்கள் இலவச பிரசாத வழங்கும் பணியில் உள்ளனர். மீதமுள்ள 18 ஊழியர்கள் உள்ளனர்.
நேற்று முருகன் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து அன்னதானம் சாப்பிட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம் அன்னதானத்தை பரிமாற போதிய பணியாளர்கள் இல்லாததே ஆகும். எனவே கோவில் நிர்வாகம் அன்னதான திட்டத்தில் போதிய பணியாளர்களை நியமித்து பக்தர்களுக்கு விரைந்து அன்னதானம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.