திருநெல்வேலி
தக்காளியை தொடர்ந்து இல்லத்தரசிகளுக்கு கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம் விலை
|தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் இல்லத்தரசிகளுக்கு கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது. நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180-க்கு விற்பனையானது.
தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் இல்லத்தரசிகளுக்கு கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது. நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180-க்கு விற்பனையானது.
உச்சத்தில் தக்காளி விலை
சமையலில் சுவை சேர்க்கும் தக்காளி விலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் உள்ளது. சதத்தை கடந்து அதாவது ஒரு கிேலா ரூ.100-ஐ தாண்டி விற்பனையாவதால் இல்லத்தரசிகள் குறைந்த அளவே வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை மகாராஜாநகர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி கடந்த வாரம் ரூ.110-க்கு விற்பனையானது. பின்னர் ரூ.98 வரை குறைந்தது. ஆனால், அது ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை. நேற்று ரூ.10 உயர்ந்து 108-க்கு விற்பனையானது. இதேபோல் தனியார் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சின்னவெங்காயம் விலை உயர்வு
தக்காளி விலையை தொடர்ந்து தற்போது சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்து, இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. பாளையங்கோட்டை மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.130-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூ.180 ஆக அதிகரித்து உள்ளது. நாட்டு வெங்காயம் ரூ.160-க்கும், ஜண்டா ரக வெங்காயம் ரூ.180-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல் இஞ்சி, குண்டு மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று முன்தினம் கிலோ ரூ.300-க்கு விற்ற இஞ்சி நேற்று மேலும் ரூ.30 அதிகரித்து ரூ.330-க்கு விற்கப்பட்டது. குண்டு மிளகாய் ரூ.130-க்கும், சின்ன மிளகாய் ரூ.120-க்கும் விற்பனையானது. இதுதவிர பீன்ஸ் கிலோ ரூ.100, அவரை ரூ.80, கேரட் ரூ.60 என்ற விலையிலும், புடலங்காய், பீட்ரூட், சவ்சவ் உள்ளிட்ட சில காய்கறிகள் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வரத்து குறைவு
ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் மழை, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி, மிளகாய் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தென்காசியில் தக்காளி ஒரு கிலோ ரூ.110-க்கும், சின்ன வெங்காயம் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.80, மிளகாய் ரூ.80, புடலங்காய் ரூ.50, பீட்ரூட் ரூ.40, சவ்சவ் ரூ.40, பாகற்காய் ரூ.100, கத்தரிக்காய் ரூ.100, காலிபிளவர் ரூ.80, வெண்டைக்காய் ரூ.60, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, இஞ்சி ரூ.300-க்கு விற்பனையானது. பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை ரூ.150 ஆகவும், மிளகாய் விலை ரூ.120 ஆகவும் இருந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி உழவர் சந்தையில் நேற்று 7 காய்கறிகளின் விலை கிலோ ரூ.100-ஐ தாண்டி இருந்தது. பாகற்காய் ரூ.100-க்கும், மிளகாய் ரூ.140-க்கும், சின்ன வெங்காயம் ரூ.140-க்கும், பீன்ஸ் ரூ.110-க்கும், பட்டர் பீன்ஸ் ரூ.160-க்கும், இஞ்சி ரூ.300-க்கும், பச்சை பட்டாணி ரூ.200-க்கும் விற்பனையானது.
ஒரு கிலோ சுரைக்காய் ரூ.15, கத்தரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.90, கொத்தவரைக்காய் ரூ.50 முதல் ரூ.60 வரை, மல்லி ரூ.70, முருங்கைக்காய் ரூ.50, சேனை ரூ.60, வெண்டைக்காய் ரூ.60, மாங்காய் ரூ.40, பல்லாரி ரூ.30, வாழைக்காய் ரூ.40, பூசணிக்காய் ரூ.20, கருணைக்கிழங்கு ரூ.70, பீர்க்கன்காய் ரூ.50, சிறுகிழங்கு ரூ.70, புடலங்காய் ரூ.40, தக்காளி ரூ.90, முட்டைகோஸ் ரூ.40, கேரட் ரூ.60, காலிபிளவர் ரூ.60, சவ்சவ் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.30, முள்ளங்கி ரூ.40-க்கு விற்பனையானது.
பொதுமக்கள் கோரிக்கை
அத்தியாவசிய காய்கறிகளான தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருவதால் அவற்றை வாங்க ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.