அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை
|அமைச்சர்களை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து வேலூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டுகள் தீர்ப்பு அளித்தன.
இந்த தீர்ப்புகளை எதிர்த்து தாமாக முன்வந்து ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், சிறப்பு கோர்ட்டு, ஐகோர்ட்டு நடவடிக்கைகளை கண்டித்து அவர் கருத்துகளை கூறினார். இந்த வழக்குகளுக்கு பதில் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வரிசையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதையும் தற்போது நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை 2012-ம் ஆண்டு சிவகங்கை கோர்ட்டு விசாரித்து அவரை விடுதலை செய்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (வியாழக் கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.