< Back
மாநில செய்திகள்
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
28 Sept 2022 2:32 PM IST

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்சிக்காரர்கள் மணல் அள்ள நான் மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு, தனியார் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்று நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, நதியைச் சூறையாடும் அவலத்துக்குத் துணைபோவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மணல் கடத்தும் உரிமை ஏகபோகமாக ஆளுங்கட்சியினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் இச்சம்பவம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க, சட்டவிரோதமாக மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையாக டெண்டர் விடப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்குத்தான் மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது. இச்சூழலில், மணல் அள்ள கட்சிக்காரர்களுக்கு அனுமதி வழங்கியதாக திமுக எம்.பி. பேசியது யார் கொடுத்த தைரியத்தில்?

எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், மணல் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்