சென்னை
சென்னையில் இரவு நேரத்திலும் மேம்பாலங்கள் திறந்து இருக்கும் - போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
|சென்னையில் இரவு நேரத்திலும் வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலங்களை திறக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் கடந்த வாரம் பொன்விழாவை நிறைவு செய்துள்ளது. இது தென்னிந்தியாவின் முதல் மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை பெருநகரின் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்த பல மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தற்போது 33 மேம்பாலங்கள் உள்ளன. குறிப்பாக காலை மற்றும் மாலையில் அதிக போக்குவரத்து ஏற்படும் நேரங்களில் சிறந்த வாகன போக்குவரத்தை உறுதி செய்வதில் அவை பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், கொரோனா தொற்று காலங்களில் சாலையைப் பயன்படுத்துபவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் அவை போக்குவரத்துக்காக மூடப்பட்டன. அதன்பிறகு, மேம்பாலங்களில் விபத்துகளை ஏற்படுத்த கூடிய வகையில் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதற்காக இந்த அமைப்பு தொடர அனுமதிக்கப்பட்டது.
பல்வேறு அலுவலக நேரங்கள் காரணமாக இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரவு நேரங்களிலும் மேம்பாலங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக தற்காலிக நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது. மேம்பாலங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டாமல் இருக்க போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.