காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் பட்டு சேலை கடைகளில் பறக்கும் படை குழுவினர் ஆய்வு
|காஞ்சீபுரத்தில் பட்டு சேலை கடைகளில் பறக்கும் படை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உலக அளவில் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரத்தில் நாளுக்கு நாள் போலி பட்டுச்சேலைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக விசைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுசேலைகளை காஞ்சீபுரம் பட்டு என போலியாக விற்பனை செய்து வருவதும் அதிகரித்துள்ளதாகவும் கைத்தறி நெசவாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன்படி கைத்தறிக்காக 11 வகை ரகங்களை சட்டவிரோதமாக விசைத்தறியில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதை தடுக்க கைத்தறி ஆணையரால் அமைக்கப்பட்ட பறக்கும்படையினரால் 3 பட்டுசேலை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளில் "சில்க்மார்க்" முத்திரை அச்சிடப்பட்ட லேபிள் ஒட்டி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கடைகளுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடுசட்டம் 1985 பிரிவு 6 (1) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டும், சேலைகள் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டும் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஜவுளி கடைகள் இம்மாதிரியான விதிமீறல்கள் இல்லாமல் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த உரிய விழிப்புணர்வுடன் செயல்படவும் மற்றும் இதனை மீறுபவர்கள் மீது கைத்தறி ரக ஒதுக்கீடுசட்டம் 1985, இந்திய நுகர்வோர் பாதுகாப்புசட்டம் 1986 மற்றும் இந்திய வர்த்தக முத்திரை சட்டம் 1999 போன்றவற்றின் கீழ் போலீஸ்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.