கரூர்
டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
|கரூரில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஆசிரியர் தினவிழா
சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இந்தியாவின் 2-வது ஜனாதிபதியும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி கரூர் கொளந்தாகவுண்டனூரில் உள்ள தேவி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தங்களது குருவான ஆசிரியர்களை வணங்கி அவர்களுக்கு மாணவ-மாணவிகள் பரிசுகள் வழங்கினர். இதில் தலைமை ஆசிரியர் ராஜா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பரிசு
இதேபோல் தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுக்கு பேனாவை பரிசாக வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கரூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.