சென்னை செம்மொழிப்பூங்காவில் நாளை மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
|கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை செம்மொழிப்பூங்காவில் நாளை மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை,
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் 15.88 இலட்சம் எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகிறது. மேலும், இத்துறையின் கட்டுப்பாட்டில் 79 அரசு தோட்டக்கலை பண்னைகளும் 24 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களிலுள்ள பூங்காக்களில் கோடை விழா நடத்தப்படுகிறது. மேலும், குற்றாலத்தில் சாரல் விழா, கொல்லி மலையில் வல்வில் ஓரி விழா போன்ற கண்காட்சிகள் பிற மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, சென்னை, கலைவானர் அரங்கில் நடத்தப்பட்ட முதலாவது மலர் காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இவ்வாண்டு செம்மொழி பூங்காவில் 3.6.2023 முதல் 5.6.2023 வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இம்மலர்காட்சியில், தமிழகத்தில் பயிரிடப்படும் பல வண்ண கொய்மலர்களையும், பாரம்பரிய மலர்களையும் கொண்டு பல்வேறு வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மலர்காட்சியில் இரண்டரை இலட்சம் கொய்மலர்களும், 250 கிலோ உதிரிபூக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு தேவைப்படும் மலர்கள் கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, கன்னியாகுமாரி. கொடைக்கானல், போன்ற இடங்களிலிருந்து வருவிக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் மூலம் நடைபெற இருக்கும் 2வது மலர் கண்காட்சியை காலை 9.00 மணிக்கு துவக்கி வைக்க உள்ளார்கள்.
மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இம்மலர் காட்சியினை பார்வையிட விரும்புவோர் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் நுழைவு சீட்டினை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க, இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து, மலர்காட்சியை காண வருமாறு அன்புடன் வேண்டப்படுகிறது.
பார்வையாளர்களின் வாகனம் நிறுத்த அருகில் உள்ள சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இக்கோடை காலத்தில் நடைபெறும் 2-வது மலர்க்காட்சியினை அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்துடன் கண்டு களித்து மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.