திண்டுக்கல்
நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
|நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களது தோட்டங்களில் பூக்களை பறித்து நிலக்கோட்டை பூமார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். அவற்றை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். தென் தமிழகத்தின் முக்கிய பூமார்க்கெட்டாக நிலக்கோட்டை பூமார்க்கெட் விளங்குகிறது.
இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) ஆயுதபூஜையும், மறுநாள் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களது தொழில் நிறுவனங்கள், பட்டறைகள், வீடுகளில் வழிபாடு செய்வார்கள். இதில் பூக்கள் முக்கிய இடம்பிடிக்கும். இதனால் நிலக்கோட்டை பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். குறிப்பாக கதம்ப மாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. இதனால் அரளி, செண்டுமல்லி, செவ்வந்தி, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரளிப்பூ கிலோ ரூ.10-க்கு விற்ற நிலையில், நேற்று அதன் விலை ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையானது. அதேபோல் செண்டுமல்லி கிலோ ரூ.100, கோழிக்கொண்டை ரூ.80, செவ்வந்தி ரூ.150, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.60, பன்னீர் ரோஜா ரூ.150, சம்பங்கி ரூ.200-க்கு விற்பனை ஆனது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரளி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்தது. தற்போது பண்டிகை காலத்தையொட்டி பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.