நாமக்கல்
நாமக்கல்லில் பூக்கள் விலை உயர்வு
|பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பூக்கள் விலை உயர்வு
நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்கின்றனர்.
ஆனால் சமீப காலமாக நாமக்கல் மாவட்டத்தில் விளையும் பூக்களை விவசாயிகள் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சற்று குறைந்தது. எனவே அவற்றின் விலை உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.360-க் கும், முல்லை பூக்கள் கிலோ ரூ.700-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கோவில்களில் சிறப்பு பூஜை
இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் நேற்று கிலோ ரூ.120-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ கிலோ ரூ.100-க்கும் விற்பனையானது. பங்குனி உத்திரவிழா தொடங்கி இருப்பதால், கோவில்களில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதே நேரத்தில் பூக்கள் வரத்தும் குறைந்து உள்ளது. இதுவே பூக்கள் விலை உயர்வுக்கு காரணம் எனவிவசாயிகள் தெரிவித்தனர்.