தஞ்சாவூர்
பூக்கள் விலை உயர்வு
|விநாயகர்சதுர்த்தியையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்ந்ததால் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,250-க்கு விற்பனையானது.
விநாயகர்சதுர்த்தியையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உயர்ந்ததால் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,250-க்கு விற்பனையானது.
பூக்கள் விலை உயர்வு
தஞ்சை பூக்கார தெரு சுப்பிரமணியசாமி கோவில் அருகேயும், பர்மாகாலனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தஞ்சை மார்க்கெட்டுக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.இதே போல் தஞ்சையில் இருந்து மன்னார்குடி, நீடாமங்கலம், அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். இதே போல மழை காலக்கட்டத்திலும், பனிக்காலத்திலும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால், வரத்து குறைவாக இருக்கும். இதனால் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும்.இந்த நிலையில் நேற்று ஆவணி மாத கடைசி முகூர்த்தநாள் என்பதாலும், இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா என்பதாலும் தஞ்சை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
மக்கள் கூட்டம்
மல்லிகைப்பூ கிலோ ரூ.700-க்கு விற்பனையாகி வந்தது. ஆனால் நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.1250-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் முல்லைப்பூ கிலோ ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், ஆப்பிள் ரோஸ் ரூ.250-க்கும், பன்னீர்ரோஸ் ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.40 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் மக்கள் அதிக அளவில் வந்து வாங்கி சென்றனர். இதனால் பூ மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா என்பதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருந்தது. இதனால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளன. இருந்தாலும் பூக்களின் வரத்தும் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வந்து வாங்கி சென்றதால் பூக்கள் விற்பனை நன்றாக இருந்தது என்றனர்.