< Back
மாநில செய்திகள்
தொட்டியம், உப்பிலியபுரம் பகுதி கோவில்களில் பூக்குழி திருவிழா
திருச்சி
மாநில செய்திகள்

தொட்டியம், உப்பிலியபுரம் பகுதி கோவில்களில் பூக்குழி திருவிழா

தினத்தந்தி
|
9 May 2023 1:08 AM IST

தொட்டியம், உப்பிலியபுரம் பகுதி கோவில்களில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதேபோல் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா நடந்தது.

தொட்டியம், உப்பிலியபுரம் பகுதி கோவில்களில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதேபோல் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா நடந்தது.

பூக்குழி திருவிழா

தொட்டியத்தை அடுத்த தோளூர்பட்டி ஊராட்சி பாலசமுத்திரம், கணேசபுரம், ஜே.ஜே. நகரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 23-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று பூக்குழி திருவிழா நடந்தது. விரதம் இருந்து வந்த பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உப்பிலியபுரம்

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டி ஊராட்சி தங்கநகர் மற்றும் குண்டக்கல் மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது. முன்னதாக கரகம் பாலித்தல், பால்குடம், அலகு குத்துதல், அக்னி சட்டி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாண உற்சவம்

மண்ணச்சநல்லூர் மேலச்செட்டி தெருவில் உள்ள ராமகிருஷ்ணா பஜனை மடத்தில் ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி தினமும் திவ்ய நாம பஜனை மற்றும் பிருந்தாவன பஜனை நடைபெற்றது.நேற்று சீதாராம கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு உஞ்சவீர்த்தி- நாம சங்கீர்த்தனம் மற்றும் சீதாராம திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு சீதாராமன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.தொடர்ந்து பிருந்தாவன பஜனை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜை

மண்ணச்சநல்லூரில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று 38-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் வேண்டி நடந்த இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

பஞ்சப்பிரகார விழா

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கேடயத்தில் எழுந்தருளி துர்க்கை அம்மன் சன்னதி உள்ள பிரகாரம் வழியாக முதல் சுற்றும், முருகப்பெருமான் சன்னதி உள்ள பிரகாரம் வழியாக இரண்டாவது சுற்றும், எமதர்மன் சன்னதி உள்ள பிரகாரம் வழியாக மூன்றாவது சுற்றும், தேரோடும் வீதி உள்ள பிரகாரம் வழியாக நான்காவது சுற்றும், ஐந்தாவதாக பஞ்ச பிரகாரம் சுற்றும் தெருக்களின் வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று காலை 7 மணிக்கு விடையாற்றியும், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்