< Back
மாநில செய்திகள்
300 பண்ணைகளில் உற்பத்தியாகும் உலகத்தரமிக்க மல்லிகை நாற்றுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

300 பண்ணைகளில் உற்பத்தியாகும் உலகத்தரமிக்க மல்லிகை நாற்றுகள்

தினத்தந்தி
|
10 Dec 2022 10:39 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் சரியான தட்பவெப்ப நிலை காரணமாக 300 நாற்று பண்ணைகளில் உலத்தரமிக்க மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சரியான தட்பவெப்ப நிலை காரணமாக 300 நாற்று பண்ணைகளில் உலத்தரமிக்க மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மலர் சாகுபடி

இந்தியாவில் மலர் சாகுபடி சுமார் 86 ஆயிரம் எக்ேடரில் செய்யப்படுகிறது. இதில் தமிழகத்தில் குறிப்பாக ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 75 சதவீதம் உதிரி மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உதிரி பூக்கள் என்று சொல்லப்படும் மல்லிகை, பிச்சி, செண்டுமல்லி, சாமந்தி, அரளி, சம்பங்கி போன்ற வாசனை மிக்க மலர்கள் உலகிலேயே தமிழகத்தில் தான் அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நம் முன்னோர்களின் அறிவுசார் உற்பத்தியில் ஒன்றாக கருதப்படுகிறது.

குறிப்பாக மல்லிகைப்பூ உற்பத்தியில் பங்களிப்பு என்பது 45 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. இந்த மல்லிகை பூ உற்பத்திக்கு தேவையான உலகத்தரமிக்க மல்லிகை நாற்றுகள் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ஏறத்தாழ 300 பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு நாடுமுழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தட்பவெப்ப நிலை

இதில் குறிப்பாக தங்கச்சிமடம், அக்காள்மடம் பகுதி மல்லிகை நாற்று உற்பத்திக்கு மிகவும் சிறந்த தட்பவெப்ப நிலையை கொண்டு உள்ளது. இந்த பகுதியில் காற்றின் ஈரப்பதம் அதிகஅளவில் உள்ளதால் மல்லிகை நாற்றுகள் நன்றாக வளர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் உதிரி பூக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

முக்கியமாக கோவில்களில் தினசரி பூஜைகளுக்கும், தமிழர்களின் பாரம்பரிய விழாக்களுக்கும் அதிகஅளவில் உதிரி பூக்கள் பயன்பட்டு வருகிறது. இதன்காரணமாக நாளுக்கு நாள் உதிரி மலர்களின் தேவை தமிழகத்தில் மட்டுமல்லாது நாடுமுழவதும் உயர்ந்து கொண்டே போகிறது. அதனால் தோட்டக்கலைத்துறை இதுபோன்ற மலர் பயிர்களின் மூலம் அதிக வருவாயை ஈட்டித்தரும் துறையாக மாறி வருகிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 300 டன் உதிரி மலர்களும், 420 டன் தழை தாவரங்களும், 500 மில்லியன் டன் கொய் மலர்களும், 10 மில்லியன் டன் உலர் மலர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து மலர் பயிர்களில் 18 வகையான உயர்விளைச்சல் ரகங்களும் இதற்கு தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

தோட்டக்கலை பயிர்கள்தான் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பிரிக்க முடியாத உறவாக உள்ளது. இதில் உதிரி மலர்கள் மனிதனுக்கும் இறைவனுக்கும் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ளது. மல்லிகையில் உள்ள ஜாஸ்மோனிக் ஆசிட் என்ற வாசனை பொருள் பெண்களின் கூந்தலில் இடும்போது மனஅழுத்தத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதன்காரணமாகவே மல்லிகையின் வாசத்திற்கு அனைவரும் மயங்கி வருகின்றனர்.பெண்களின் விருப்ப மலர்களில் மல்லிகை முதல் இடம் வகிக்கிறது.

எதிர்பார்ப்பு

தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் உதிரி மலர்களை பயன்படுத்தி அதன் பயன்களை பெற வேண்டும். உதிரி மலர்களை அதிகம் பயன்படுத்தும்போது அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வாய்ப்பு உள்ளது. மலர் சாகுபடி அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளும், பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மலர் நாற்றுகளை வாங்கி பயிரிட்டு அதிக லாபம் பெறலாம். உதிரி மலர்கள் உற்பத்திக்கு தேவையான அனைத்து விபரங்கள் மற்றும் ஆலோசனைகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மண்டபம் குண்டுமல்லி

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது :- ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், அக்காள் மடம் பகுதிகளில் சுமார் 200 முதல் 300 வரையிலான மல்லிகை நாற்றுப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் குண்டுமல்லி என்று அழைக்கப்படும் இந்த மல்லிகை நாடு முழுவதும் புகழ் வாய்ந்தது.

இந்த மண்டபம் மல்லிகைக்கு என்றுமே அதிக மவுசு இருந்து வருகிறது. இதன் காரணமாக மண்டபம் பகுதியில் உள்ள இந்த நாற்றுகளை ஏராளமான விவசாயிகள் வாங்கி சென்று பயிரிட்டு லாபம் சம்பாதித்து வருகின்றனர். அக்காள்மடம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.20 முதல் 30 லட்சம் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து நாடு முழுவதும் அனுப்பி வருகின்றனர்.

ஒரு நாற்று ஒன்றின் விலை ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்பனை ஆகிறது. ஒரு விவசாயி சுமார் 10 ஆயிரம் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்வதற்கு ரூ. 4 ஆயிரம் செலவழித்தால் ரூ.10 ஆயிரம் வருவாய் கிடைக்கும். நாற்றுகளின் வளர்ச்சி காலம் 90 நாட்களாகும் 45 நாட்களிலேயே வேர் வளர்ச்சி பெற தொடங்கினாலும் 90 நாட்களில் முழுப்பலன் தரும்.

வேலைவாய்ப்பு

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலை இல்லாத இளைஞர்கள் இந்த மல்லிகை நாற்றுக்களை உற்பத்தி செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம். இந்த மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்ய மண் மேலாண்மை, உர மேலாண்மை, பயிர் மேலாண்மை போன்ற அனைத்து விவரங்களையும் திட்ட ஒருங்கிணைப்பாளர், ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கேட்டு தெரிந்து பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மல்லிகை நாற்று உற்பத்தி செய்து வரும் விவசாயி முத்துமாரி கூறியதாவது:- தங்கச்சிமடம் அருகே தென்குடா பகுதியில் 3 ஏக்கரில் மல்லிகைப்பூ நாற்று உற்பத்தி செய்து வருகிறேன். இது லாபகரமான தொழிலாக உள்ளது. மல்லிகை செடியில் காய், விதை எதுவும் வராது. பூ மட்டுமே பூக்கும். பந்தல் அமைத்து தாய் செடியில் இருந்து வெட்டிய குச்சியை நட்டு வைத்து வளர்க்க வேண்டும்.

இந்த பகுதி மணற்பாங்கான பகுதியாக இருப்பதால் இந்த மண்ணில் காணப்படும் கருப்புதுகள் காரணமாக பூமிக்குள் சீக்கிரமாக வேர் இறங்கி விடுகிறது. 1 மாதத்தில் செடி வளர தொடங்கி விடும். 45 நாட்களில் நாற்றுகளை விற்பனை செய்யலாம். வைகாசி முதல் கார்த்திகை வரை மல்லிகை நாற்று சீசன்.

அரசு உதவி

மார்கழி முதல் சித்திரை வரை உற்பத்தி செய்ய இயலாது. 5 சென்ட் இடத்தில் மல்லிகை நாற்று பண்ணை அமைக்க ரூ.1 லட்சம் செலவாகும். செலவு போக லாபம் ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கிடைக்கும். ஒரு நாற்று விலை ரூ.1.50 முதல் ரூ.5 வரை விற்பனையாகும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் மல்லிகை நாற்று அனுப்பி வருகிறோம். இந்த நாற்றை வைத்துதான் பல மாவட்டங்களில் மல்லிகை பூ உற்பத்தி செய்யப்படுகிறது. நாற்று உற்பத்தியை பெருக்க, கூடுதல் வருமானம் கிடைக்க அரசு போதிய உதவி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்