நாமக்கல்
பனிப்பொழிவால் வரத்து குறைவு: நாமக்கல்லில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு
|பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் அதன் விலை 'கிடுகிடு' என உயர்ந்தது.
பூக்கள் விலை உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர், வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும். இதனை சிறு வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த மார்க்கெட்டுக்கு வழக்கமாக சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருவதால் பூக்கள் வரத்து வெகுவாக குறைந்தது. நேற்று சுமார் 500 கிலோ (½ டன்) பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. இதனால் பூக்கள் விலை 'கிடுகிடு' என உயர்ந்தது.
மல்லிகை ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
நாமக்கல் தினசரி மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று ரூ.3 ஆயிரத்துக்கும், ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முல்லை பூக்கள் நேற்று கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரளி கிலோ ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சம்பங்கி பூ கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து உள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை 2 மற்றும் 3 மடங்கு உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சில பூக்கள் இந்த விலைக்கும் கிடைப்பது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.