கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி பகுதியில்சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்
|வேப்பனப்பள்ளி பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூக்கள் சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் விவசாயிகள் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்து வந்தனர். செண்டுமல்லி, கனகாம்பரம், மல்லி, காக்கட்டான், சாமந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு வரை வேப்பனப்பள்ளி பகுதியில் விளைச்சல் அமோகமாக இருந்தது. பின்னர் கொரோனா மற்றும் வறட்சி காரணமாக விலை பூக்கள் சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர். விவசாயிகள் காய்கறிகள் பயிரிட்டு வந்தனர். இதனால் கிருஷ்ணகிரி, ஓசூர், குப்பம், பெங்களூரு, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்திப்பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரலட்சுமி நோன்பையொட்டி பூக்கள் அறுவடை செய்யப்பட்டு ஒரு கிலோ சாமந்தி ரூ.50 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த மாதம் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சாமந்தி பூக்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்க்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து எதிர்பார்த்துள்ளனர். மேலும் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.