கோயம்புத்தூர்
கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு
|வால்பாறையில் கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
வால்பாறை
வால்பாறையில் கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
வால்பாறையில் கனமழை
வால்பாறையில் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமடையாமல் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது. ஒருசில சமயங்களில் மட்டும் கனமழை பெய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியது. இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி நகரில் வலம் வந்ததை காண முடிந்தது. மேலும் கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூழாங்கல் ஆறு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியதை தொடர்ந்து வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓரளவிற்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். முக்கிய சுற்றுலா தலமான கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிக்க முடியவில்லை. கரையோரத்தில் நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
சோலையாறு அணை
இது தவிர தொடர் மழையால் ஆறுகள், நீரோடைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அங்கு மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி மேல் நீராரில் 67 மி.மீ., கீழ் நீராரில் 44 மி.மீ., சோலையாறு அணை, வால்பாறையில் தலா 47 மி.மீ. மழை பெய்தது. அணையின் நீர்மட்டம் 96.90 அடியாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் சோலையாறு அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து, 2 மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.