தென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு; கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
|கெலவரப்பள்ளி அணையில் இருந்து தற்போது 4,480 கனஅடி தண்ணீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 562 கன அடியாக இருந்த நிலையில், நேற்று நீர்வரத்து வினாடிக்கு 2,270 கன அடியாக உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,513 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் மதகுகள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அணையில் இருந்து தற்போது 4,480 கனஅடி தண்ணீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் அங்குள்ள மக்களிடம் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.