< Back
மாநில செய்திகள்
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு இரும்புலிச்சேரி தரைப்பாலம் சேதம் - பொதுமக்கள் பாதிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு இரும்புலிச்சேரி தரைப்பாலம் சேதம் - பொதுமக்கள் பாதிப்பு

தினத்தந்தி
|
17 Nov 2022 2:55 PM IST

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இரும்புலிச்சேரி தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

பாலாற்றில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகவும் பழமைவாய்ந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்து அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து சேவூர் கல்குளம் சின்ன ஏடையத்துர் இரும்புலிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி தவித்தபோது அப்போதைய மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த பகுதி மீனவர்களை கொண்டு படகு மூலம் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு பொதுமக்களை அழைத்து சென்றனர்.

சேதம் அடைந்த பாலத்தின் அருகே ராட்சத குழாய்கள் மூலம் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இருப்பினும் கடந்த 6 ஆண்டுகளாக ஆண்டுதோறும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் இதனால் அந்த பகுதியில் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அந்த பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் செல்லமுடியாத நிலையில் உள்ளனர். கரப்பிணிகள், நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் பரிதவிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதே பகுதியில் புதிய பாலம் அமைக்க கோரி கடந்த 2016-ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரகளிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டதாகவும் பாலம் கட்டுவதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்

இந்த ஆண்டு பெய்த கனமழையால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் தற்காலிக தரைப்பாலத்தின் மீது உபரிநீர் சென்று சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்