சென்னை
கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 4 தரைப்பாலங்கள் மூழ்கியது
|கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மதுரவாயல் மற்றும் திருவேற்காடு பகுதியில் 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் தரைப்பாலங்கள் முற்றிலும் மூழ்கியுள்ளது.
குறிப்பாக மதுரவாயல் மேம்பாலத்துக்கு கீழ் சர்வீஸ் சாலையில் உள்ள தரைப்பாலம், அடையாளம்பட்டு மற்றும் மதுரவாயலில் இருந்து நொளம்பூர் செல்லும் 2 தரைப்பாலங்கள் என 3 தரைப்பாலங்களும் தற்போது நீரில் மூழ்கியுள்ளது. இந்த 3 தரைப்பாலங்களையும் மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
கடந்த மழை வெள்ளத்தின்போது இந்த தரை பாலங்களில் வெள்ளம் அதிகளவில் சென்றபோது இந்த தரை பாலம் வழியாக சென்றவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியானார்கள்.
இதனால் மீண்டும் இந்த பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தரைப்பாலத்தில் யாரும் செல்லாமல் இருக்க பாலத்தின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் மற்றும் கயிறு கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தரைப்பாலத்தில் வெள்ளம் செல்வதால் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நீண்டதூரம் சுற்றி செல்ல வேண்டியது இருப்பதால் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
அதேபோல் திருவேற்காட்டில் இருந்து காடுவெட்டி வழியாக ஆவடி சாலையை இணைக்கும் தரைப்பாலமும் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கியது. இந்த தரைப்பாலத்தை பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வந்தனர். வெள்ளப்பெருக்கால் இந்த பாலம் மூடப்பட்டதால் பொதுமக்கள் சுமார் 10 கி.மீ.தூரம் சுற்றி சென்று வருகின்றனர். சிலர் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் சென்று வருகிறார்கள்.
மேலும் இந்த தரைப்பாலம் அருகே கூவம் ஆற்றில் அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால் வெள்ளம் சீராக வெளியேற முடியாமல் தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்துவிடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.