< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வைப்பூர் கிராமத்தில் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் மும்முரம்

தினத்தந்தி
|
8 Aug 2022 12:27 AM IST

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைப்பூர் கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில் கொள்ளிட நீர் புகுந்ததால் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழை, தென்னை, நெல், உளுந்து, பருத்தி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை கண்டு விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறினர்.

பயிர்கள் சேதம்

வைப்பூர் கிராமத்தில் உள்ள வயல்வெளிகள் தற்போது ஏரிபோல் காட்சியளிக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒருசிலர் முகாமிற்கு வராமல் அவர்களது வீட்டில் முடங்கி கிடந்தனர். இதையடுத்து, திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேசி அவர்களை முகாமிற்கு அழைத்து சென்றார்.

இதேபோல் கீழராமநல்லூர், மேலராமநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள வயல்களில் வெள்ளம் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த மிளகாய், உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சேதமடைந்தது. இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு அரசியல் கட்சியினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

நிவாரண உதவி

இந்தநிலையில் வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்கள், வீடுகள், கால்நடைகளை கணக்கெடுக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி பெற்று தரு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்