< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு   குறைய தொடங்கியது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியது

தினத்தந்தி
|
22 July 2022 1:29 AM IST

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியது

அய்யம்பேட்டை


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியது.

வெள்ளம் ெபருக்கெடுத்து ஓடியது

கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக அந்த மாநில அணைகளிலிருந்து பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணைக்கு வந்த தண்ணீர் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.இந்த தண்ணீரில் பெருமளவு முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதியில் செயல்பட்டு வரும் ஏராளமான செங்கல் சூளைகளை வெள்ள நீர் சூழ்ந்தது. சுடாத கற்கள் தண்ணீரில் கரைய தொடங்கியது. இதனால் செங்கல் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் செய்வதறியாது திகைத்தனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல் உற்பத்தி

இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் கூறுகையில்,

கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதியில் பல ஆண்டுகளாக செங்கல் உற்பத்தி செய்து வருகிறோம். இந்த பகுதியில் தரமான மண்ணால் தயாரிக்கப்படும் செங்கல்லுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்த கற்கள் விற்பனைக்காக தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஒரத்தநாடு, திருவையாறு பாபநாசம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

செங்கல் தயாரிப்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் படுகை மண்ணை விலைக்கு வாங்கி செங்கல் தயார் செய்து வருகிறோம். தொழிலாளர்களுக்கு முன் பணம், கூலி, குடியிருப்பு, சூளைக்கான விறகு, கற்கள் அடுக்கும் செலவு, போக்குவரத்து செலவு என பல செலவுகளை நாங்கள் எதிர்கொண்டு செங்கல் உற்பத்தி செய்து வருகிறோம்.

செங்கல்லுக்கு தட்டுப்பாடு

இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் செங்கல் உற்பத்தி செய்து வந்தோம். கடந்த மே மாதத்தில் அவ்வப்போது பெய்த பெருமழையால் செங்கல் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சுடாத லட்சக்கணக்கான கற்கள் நீரில் மூழ்கி கரைந்து போனது. இதனால் ஒவ்வொரு செங்கல் உற்பத்தியாளருக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் தொழில் தொடங்குவதற்கு பல நாட்கள் ஆகலாம். கல் தயார் செய்வதற்கான களம் காய்ந்த பிறகு தான் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடியும். இதனால் செங்கல்லுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்