< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பவானி கூடுதுறையில் புனித நீராட தடை
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பவானி கூடுதுறையில் புனித நீராட தடை

தினத்தந்தி
|
17 July 2022 12:40 PM IST

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானி,

தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா ,கேரளா ,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காவிரி படுகைகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா மாநிலத்தில் அதிக மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்ற நிலையில் அந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை நீர் எட்டியதால் தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பவானி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி பாலக்கறை படித்துறை வீதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது இதே போல் தினசரி மார்க்கெட் அருகே உள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 120-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்களை வெளியேற்றிய வருவாய்த் துறையினர் அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை, ஆடி 1 மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி கூடுதுறை வெறிச்சோடி காணப்பட்டது

மேலும் செய்திகள்