சென்னை
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை
|பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை காஞ்சீபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு முழுவதும் நிரம்பி 5,700 கன அடி உபரி நீர் காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றில் பாய்ந்தோடி வருகிறது. பாலாறு மற்றும் வேகவதி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரால் வாலாஜாபாத் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளப்பெருக்கின் போது சேதமடைந்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு இருந்த வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் வழியாக பாலாற்றில் அதிக அளவு மழை வெள்ளம் தற்போது சென்று வருவதால் தரைப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலாற்றின் இருபுறமும் வாலாஜாபாத் போலீசாரும், மாகரல் போலீசாரும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வாலாஜாபாத்துக்கும் அவளூருக்கும் இடையே உள்ள 1.2 கிலோமீட்டர் தரைப்பால சாலையை பயன்படுத்தும் அங்கம்பாக்கம், அவளூர், கண்ணடியான்குடிசை, கணபதிபுரம், ஆசூர், நெய்குப்பம், தம்மனூர், காமராசபுரம், இளையனார் வேலூர், வள்ளி மேடு, காவாந்தண்டலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீண்டும் தரைப்பாலம் சேதம் அடைந்து விடுமோ என அச்சம் அடைந்துள்ளனர்.
பாலாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக அவ்வப்போது சேதமடையும் வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.