கரூர்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
|வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும்.இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் சுமார் 54ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், சோளம், வாழை, வெங்காயம், பருத்தி போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறது. இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதரமாக பயன்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவ மழை
இந்தநிலையில் கடந்த 2 நாளாக வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் கேரளா மாநிலம் மூணாறு மற்றும் அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான துவானம், பாம்பாறு, தேனாறு, சின்னாறு, ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 88 அடியை தாண்டியது.இதனால் அணையின் நலன் கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றினர். நேற்று இரவு 9மணிக்கு அணைக்கு வினாடிக்கு 10525 கனஅடி தண்ணீர் வந்தது. மேலும் இரவு நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கரூர் மாவட்ட கரையோர மக்களுக்கு அந்தந்த வருவாய் துறை மூலம் தண்டோர போட்டு பாதுகாப்பாக இருக்கும்படி கரூர் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை விடுத்துள்ளனர்.
துணை ஆறுகளில் உபரிநீர் வெளியேற்றம்
இதேபோல் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான பாலாறுபொருந்தலாறு தனது முழுக்கொள்ளளவான 65 அடிக்கு தற்போது 65 அடி உள்ளது. அணைக்கு 9000 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 9000கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் என்னுமிடத்தில் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதேபோல் பரப்பலாறு அணையிலிருந்து 60கனஅடி தண்ணீh; வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டை நங்காஞ்சி அணையில் கலக்கிறது.இதேபோல் வரதமாநதி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குதிரை ஆறு அணையிலிருந்து 1500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கொழுமத்தில் அமராவதி ஆற்றில் கலக்கிறது. குடகன் ஆறு அணையிலிருந்து 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் மூலப்பட்டி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்த துணைஆறுகளில் வெளியேற்றப்படும் 9700 கனஅடி தண்ணீர் அணைத்தும் அமராவதி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் கலக்கிறது.
நீர்மட்டம்
இதேபோல் அமராவதி அணையில் நேற்று இரவு 9மணிக்கு நீர்மட்டம் 88.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 10525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 13750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 3878.72 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
26,500 கனஅடி தண்ணீர்
அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட 13750 கனஅடி தண்ணீரும், துணை ஆறுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 9760 கனஅடி தண்ணீரும், மேலும் திருப்பூர் மாவட்டம், கரூர் மாவட்ட அமராவதி ஆற்றங்கரையோரத்தில் பெய்த மழை தண்ணீர் சுமார் 3ஆயிரம் கனஅடி தண்ணீரும் சேர்த்து சுமார் 26500ஆயிரம் கனஅடி தண்ணீர் அமராவதி ஆற்றில் கரூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் யாரும் துணி துவைக்கவோ, ஆடு, மாடு மேய்க்கவோ செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும், வருவாய் துறையும் மற்றும் காவல் துறையும் 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.