கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
|அருவியில் நீர்வரத்து சீரான பிறகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேனி,
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பிரசித்தி பெற்ற கும்பக்கரை அருவி உள்ளது. இங்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், கேரள மாநில மக்களும் அருவிக்கு வந்து குளித்துவிட்டு செல்வர். விடுமுறை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளக்கெவி ஆகிய பகுதிகளில் மழை பெய்தால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் 5-வது நாளாக தடை விதித்துள்ளனர். இதையொட்டி அருவிக்கு செல்லும் வாசலின் முன்பக்க கதவு மூடப்பட்டது.
மேலும் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரான பிறகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.