< Back
மாநில செய்திகள்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
9 Sept 2022 7:45 PM IST

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு இந்த மாதங்களில் வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான சீசன் ஜூன் மாத இறுதியில் தான் தொடங்கியது. தற்போது ஆகஸ்ட் மாதம் முடிந்தும் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையினால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் இன்று 4-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த 4 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது குற்றாலத்தில் குறைவான சுற்றுலா பயணிகளே வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் செய்திகள்