வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளங்கள்... ரெயில் போக்குவரத்தில் மாற்றம்..!
|நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாகவும், திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் ரெயில்கள் இன்றைய தினம் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும் இன்று காலை நெல்லை நோக்கி சென்ற நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், முத்துநகர் மற்றும் சென்னை - திருச்செந்தூர் விரைவு ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் மேலும் சில ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் சில ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-
முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட ரெயில்கள்:
இன்று மாலை 4.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்: 20605) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
இன்று காலை 11.35 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருச்சி விரைவு ரெயில் (வண்டி எண்: 22628) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
பகுதியாக ரத்து செய்யப்பட்ட ரெயில் :
இன்று கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும் அனந்தபுரி விரைவு ரெயில் (வண்டி எண் : 20636) கொல்லம் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10:50 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பாதை மாற்றி விடப்பட்ட ரெயில்கள் :
சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 7.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரெயில் (வண்டி எண் - 20635) திண்டுக்கல்லில் இருந்து திருப்பி விடப்பட்டு பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக கொல்லம் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிக்குடா - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரெயில் (வண்டி எண் : 16353) இன்று மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, பாலக்காடு, சோரனுர், எர்ணாகுளம் வடக்கு, கொல்லம், திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.