வெள்ளத்தில் மூழ்கிய மயிலாடுதுறை; "நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்" - மக்கள் வேண்டுகோள்
|சீர்காழி, தரங்கம்பாடியில் நிவாரணத்தொகையை அரசு உயர்த்தி வழங்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர்.
இந்த நிலையில், நிவாரண தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழை காரணமாக எங்களது அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பணிக்கு செல்லமுடியவில்லை. அரிசி, பருப்பு போன்ற வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே மூவாயிரம் வரை செலவாகிறது.
இந்த சூழலில் அரசு அறிவித்துள்ள ஆயிரம் நிவாரண தொகை எப்படி தங்களுக்கு போதுமானதாக இருக்கும். எனவே அரசு தங்களுக்கு நிவாரண தொகையாக ரூ.5000 வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், மழையால் மயிலாடுதுறை பகுதியும் பாதிப்பை சந்தித்துள்ளது. அமைச்சரும் நேரில் வந்து ஆய்வுசெய்தார். எனவே மயிலாடுதுறை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அரசு நிவாரண தொகையை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.