< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் அருகே  மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது  10 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது 10 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிப்பு

தினத்தந்தி
|
22 Oct 2022 12:15 AM IST

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் 10 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் தென்பெண்ணையாற்றின் கிளை ஆறான மலட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த வெள்ளப்பெருக்கினால் விழுப்புரம் அருகே மேட்டுப்பாளையத்துக்கும் பரசுரெட்டிப்பாளையத்துக்கும் இடையேயான தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி இடுப்பளவிற்கு தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பரசுரெட்டிப்பாளையத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ- மாணவிகள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ராம்பாக்கம் பள்ளிக்கு சுற்றிச்செல்கின்றனர்.

இவ்வாறு பள்ளிக்கு சுற்றிக்கொண்டு செல்வதால் சிரமமான சூழ்நிலை இருப்பதால் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் தரைப்பாலத்தில் ஓடும் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர். அப்போது தரைப்பாலத்தின் அருகே நின்றிருந்தவர்கள் மாணவ- மாணவிகளை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அரசு பள்ளி மாணவ- மாணவிகள் ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடப்பதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்