< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நாமக்கல்
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
7 Sept 2022 10:08 PM IST

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பரமத்திவேலூர்

வெள்ளப்பெருக்கு

கர்நாடகா மாநிலத்தில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள இரண்டு அணைகள் நிரம்பி உள்ளன. இந்த அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி வெள்ளநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் அணை மற்றும் பவானி ஆற்றில் இருந்தும் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஜேடர்பாளையம் படுகை அணைக்கு வினாடிக்கு 1.28 லட்சம் கனஅடியாக வந்து கொண்டு இருப்பதால் காவியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே காவிரி கரையோரப் பகுதிகளான சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, அரசம்பாளையம், ஜேடர்பாளையம் படுகை அணை பகுதி, பரிசல் துறை, கண்டிப்பாளையம், வடகரையாத்தூர், கு.அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக் கூடிய பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை

பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்