கிருஷ்ணகிரி
சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு; அங்கன்வாடி மையங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு
|தளியில் பெய்த கனமழையால் பெரிய ஏரி நிரம்பியதால் சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கன்வாடி மையங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை
கனமழை
தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தளியில் 60 மில்லி மீட்டரும், தேன்கனிக்கோட்டையில் 53 மில்லி மீட்டரும், அஞ்செட்டியில் 20 மில்லி மீட்டரும் மழை பெய்தது. தளியில் பெய்த கனமழையால் அங்குள்ள பெரிய ஏரி நேற்று நிரம்பியது. ஏரியில் இருந்து தண்ணீர் மறுகால் சென்றதால் சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பென்னங்கூர் அருகே உள்ள அடவிசாமிபுரம் பகுதியில் சனத்குமார் நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். சிலர் இருசக்கர வாகனத்தில் தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் சென்றனர். கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கன்வாடி மையங்கள்
கனமழை காரணமாக தளியில் உள்ள ராமர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சின்னட்டி மற்றும் கக்கதாசம் ஆகிய கிராமங்களில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. அவற்றை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் 2 அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மையங்களுக்குள் இருந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன.
தூய்மைப்படுத்தினர்
இந்தநிலையில் நேற்று காலை குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு சென்றனர். அவர்களை மரத்தடியில் அமர வைத்தனர். தொடர்ந்து ஊழியர்கள் மையங்களுக்குள் தேங்கிய மழைநீரை வெளியேற்றி தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து குழந்தைகளை மையத்திற்குள் அமரவைத்தனர். அங்கன்வாடி ஊழியர்கள் தண்ணீரில் நனைந்த பாடப்புத்தகங்கள், அரிசி, உள்ளிட்ட உணவு பொருட்களை உலர வைத்தனர்.