சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது
|4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற விமானப் போக்குவரத்து நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. இதனிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் விமான சேவைகள் படிப்படியாக இயங்கத் தொடங்கின. அந்த வகையில் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை-ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது. இதன்படி நேற்றைய தினம் ஹாங்காங்கில் இருந்து 103 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சென்னை வந்தடைந்தது.