சென்னை
சென்னை-அந்தமான் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கியது
|பராமரிப்பு பணி, மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை முதல் அந்தமான் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கியது.
அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணி, மோசமான வானிலை நிலவியதால் பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி கடந்த 1-ந் தேதியில் இருந்து 4-ந் தேதி வரை சென்னையில் இருந்து அந்தமானுக்கு எந்த விமானங்களும் இயக்கப்படவில்லை. இதனால் அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அவதிக்குள்ளானர்கள்.
மேலும் அந்தமானில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகம் வசிப்பதால் அங்கு வசிப்பவர்கள் இங்கு வரமுடியாமலும், இங்கிருந்து அங்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்தநிலையில், அந்தமான் விமான நிலைய பராமரிப்பு பணி முடிவடைந்ததாலும், தற்போது வானிலை சீரடைந்து விட்டதாலும் நேற்று காலை முதல் சென்னை அந்தமான் இடையே விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து 5 விமானங்கள் அந்தமானிற்கு சென்று விட்டு திரும்புகின்றன. சென்னை-அந்தமான் இடையே 10 விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால், விமான சேவை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தமானுக்கு செல்லும் விமான சேவை தொடங்கப்பட்டதால் அந்தமான் செல்லும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.