அந்தமானில் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்த விமானம்: பயணிகள் வாக்குவாதம்
|180 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்ட விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அந்தமானுக்கு 180 பயணிகளுடன் விமானம் வழக்கமான நேரத்தை விட சற்று காலதாமதமாக புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. அந்தமான் வான் எல்லையை நெருங்கியபோது, அந்தமானில் கடுமையான தரைக் காற்று வீசிக் கொண்டு மோசமான வானிலை நிலவியது.
இதனால் விமானத்தை அங்கு தரை இறக்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக்கொண்டு இருந்தது. ஆனால் வானிலை சீரடையாததால் விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பி கொண்டு வர அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து 180 பயணிகளுடன் நேற்று இரவு 7 மணிக்கு அந்த விமானம் மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு திரும்பி வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.
மோசமான வானிலை காரணமாக அந்தமானில் விமானம் தரையிறங்க முடியவில்லை. எனவே விமானம் ரத்து செய்யப்படுகிறது. நாளை(அதாவது இன்று) விமானம் மீண்டும் அந்தமான் செல்லும். பயணிகள் இதே விமான டிக்கெட்டுகளில் நாளையோ அல்லது பயணிகளுக்கு விருப்பப்பட்ட வேறு ஒரு நாளிலோ அந்தமானுக்கு பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தனர்.
ஆனால் பயணிகள் பலர் அதை ஏற்றுக் கொள்ளாமல் விமானம் குறித்த நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று இருந்தால் அந்தமானில் தரையிறங்கி இருக்கும். ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதால்தான் அந்தமானில் தரைக்காற்று வீசத் தொடங்கி மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்க முடியாமல் திரும்பி வந்துவிட்டது என்று கூறி விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதியே செயல்பட்டதாக அதிகாரிகள் சமாதானம் செய்தனர். வேறு வழியின்றி தங்களுடைய விமான டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொண்டு பயணிகள் புறப்பட்டு சென்றனர்.